The National Peace Council (NPC)

si  engettamil

பொதுமக்களது விவகாரங்களிலிருந்து இராணுவத்தை பிரித்து வைக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்

யாழ்ப்பாண தீபகற்பத்தில் ஏறத்தாழ 7000 ஏக்கர் நிலப்பரப்பினை சுவீகரிப்பதற்கான மத்திய அரசாங்கத்தின் ஏற்பாடுகள் காரணமாக யுத்தத்தின் பின்னர் ஏற்படச் செய்யும் நல்லிணக்கச் செய்முறை மீது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியதான பிரச்சினைகள் தோன்றியுள்ளன. யுத்தத்தின் போது இராணுவத் தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட தனியாரது நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு தனது அறிக்கையில் சிபாரிசு செய்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கூட சர்வதேச சமூகங்களிடம் உறுதிகளை வழங்கியபோது இடம்பெயர்ந்த மக்கள் அவர்களுடைய வீடுகளுக்கே திருப்பி அனுப்பப்படுவர் என்ற நிலைப்பாட்டையே கொண்டிருந்தார். ஆனால் அண்மைக் காலத்தில் இராணுவம் தனிப்பட்டோருக்குச் சொந்தமான நிலங்களை தொடர்ந்து கைவசப்படுத்தி வைத்துக் கொண்டிருப்பதும் அவற்றை சுவீகரிக்க முயற்சிப்பதும் தேசிய நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகள் மீது ஏற்பட்டுள்ள பலத்த அடியாகக் காணப்படுகிறது. 

இவ்வாறான சுவீகரிப்பு காரணமாக பாதிப்புக்குள்ளாகக் கூடிய மக்களது எதிர்ப்புகள் மத்தியிலும் அரசாங்கம் வட பகுதியில் இராணுவத்தினரது தேவைகளுக்காக பெருமளவிலான நிலைத்தை சுவீகரிக்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் செயற்படுத்துவதிலேயே குறியாக நிற்கிறது. சுவீகரிக்கத் திட்டமிட்ட நிலங்களில் இராணுவத்தினரால் நடத்தப்படுவதற்கான சுற்றுலா பிரயாணிகளுக்கான ஹோட்டல்கள் மற்றும் பொருளாதார முயற்சிகளும் நிர்மாணிக்கப்பட உள்ளதாக அங்கே எப்படியோ சென்று வந்தவர்களால் கூறப்பட்டுள்ளது. இதற்காகத்தான் அரசாங்கம் எதிரணிக் கட்சிகளின் தலைவர் அண்மையில் வட பகுதி சென்றிருந்தபோது அந்நிலங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை என எண்ணத் தோன்றுகின்றது.
இவ்வாறாக இராணுவம் வட பகுதியில் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பகுதிகளை சுவீகரிக்கின்ற நடவடிக்கை தனியே வட பகுதியில் மாத்திரம் தான் ஏற்படுகின்றது எனக் கூறுவதற்கும் இல்லை. இதேபோன்ற நடவடிக்கைகள் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏற்பட்டு வருகின்றன. நாட்டின் கிழக்குப் பகுதியில் சிங்கள மக்கள் சம்பிரதாயமாக வாழ்ந்து வரும் பாணமை என்னும் பகுதியிலும் 1000 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பினை சுவீகரிக்க இருப்பதாக ஊடகச் செய்திகள் வந்துள்ளன. அப் பகுதி வளமானதும் , அமைதியானதுமான கடற்கரையோரக் கிராமமாகும். யுத்த காலத்தின் போது கடைசியாக ஒரு முறை அங்கு சென்று வந்தேன். அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகக் கூடிய ஒரு பகுதியாக இருந்தது. 1818 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நாட்டின் உட்பகுதிகளில் ஏற்பட்ட பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளர்களது நிலக் கொள்கைக்கு எதிரான பெரும் கலகத்தின் போது புகலிடம் தேடிச் சென்ற சிங்கள மக்கள் குடியேறிய பகுதி இதுவாகும்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் அப் பகுதியில் வாழ்ந்த மக்களை ஆயுதப் பாணியானவர்கள் அங்கிருந்து விரட்டியடித்ததன் பின்னர் இராணுவத்தினர் சுற்றி வளைத்துக் கொண்டதாக பௌத்த பிக்கு கூறியதனை ஊடகம் மேற்கோள் காட்டி இதுபற்றி விபரித்துள்ளது. அங்கே இராணுவமுகாம் ஒன்றை அமைக்கப்போவதாகக் கூறப்பட்ட போதிலும் அங்கேயும் ஹோட்டல் ஒன்றைக் கட்டப்போவதாகவே பொதுவில் நம்பப்படுகிது. வழக்கமாக எந்தவொரு கட்டிட நிர்மாணத்திற்கும் கடற்கரை பாதுகாப்பு புதை பொருளாராய்ச்சி மற்றும் காட்டுவள திணைக்களங்களிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்பது நியதியாயிருக்க, அப்படி எதுவித அனுமதியும் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமானது என்பதால் எந்த ஒரு திணைக்களத்திடம் இருந்தும் அதன் அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் அனுமதி பெறவேண்டிய தில்லை என இராணுவப் பேச்சாளர் கூறியிருப்பதாக ஊடக அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
எதிர்பாராத அளவிலான அதிகரிப்பு
இராணுவத்தின் பங்கு "நாட்டின் வாழ்வில்' அதிகரித்திருப்பது யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களின் மத்தியில் பெரிதும் எதிர்பாராத ஒன்றாகும். தொடர்ந்தும் இராணுவத்தினர் படைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டு வருகின்றனர். நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் இராணுவ செலவினம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வர்த்தக நடவடிக்கைகளிலும் இராணுவத்தின் பங்கு அதிகரித்துச் செல்கிறது. யுத்தத்தின் பின்னர் இராணுவத்தின் அளவைக் குறைப்பதற்குப் பதிலாக அரசாங்கம் அதனை பெருக்கிக் கொண்டு செல்வதற்கு காரணம் தேசிய பாதுகாப்பினைப் பேண வேண்டும் என்பதற்காக எனக் கூறி வருகிறது. இல்லாது தேசிய வாழ்வில் இராணுவத்தின் பங்கினை அதிகரிப்பதன் காரணமாக அதன் நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளை விமர்சிக்க முடியாதுள்ளது. தேசிய பாதுகாப்பு எனக் கூறப்படும் இந்த விளக்கத்தினை மூன்று தசாப்த யுத்தத்தின் பின்னரும் பொது மக்களால் தட்டிப் பேச முடியாத நிலையே காணப்படுகிறது.
எவ்வாறாயினும் யுத்தத்தின் பின்னரும் இராணுவத்தின் அளவு அதிகரித்துச் செல்வதற்கும் அதன் பங்கு அதிகரித்துச் செல்வதற்கும் வேறு விளக்கங்களும் உள்ளன. பாகிஸ்தான், மியன்மார் , இந்தோனேசியா போன்ற நாடுகளில் நாட்டை ஆளுவதில் சிவில் அதிகார நிறுவனங்களில் இராணுவம் நன்கு இணைந்துள்ளதனைப் போன்ற ஒரு பாங்கினை இலங்கையிலும் அரசாங்கம் கொண்டு வர எண்ணுவதாகவே எண்ணத் தோன்றுகின்றது. இந்நாடுகளில் பொது மக்கள் சிவில் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இராணுவம் இடம்பெற்றுள்ளது. சம்பிரதாயமான ஜனநாயக அமைப்புகளால் இராணுவம் கட்டாயமாக பொது வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது போன்று இவற்றில் இராணுவம் சிவில் வாழ்க்கையிலிருந்து ஒதுக்கப்படாதுள்ளது. இந்நாடுகளில் இராணுவம், ஹோட்டல் , வங்கிகள் பிரயாண ஏற்பாட்டு நிறுவனங்கள் போன்ற பொருளாதார முயற்சிகளையும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இராணுவத்தினர் பொருட்களையும் சேவைகளையும் மக்களுக்கு வழங்கும் வர்த்தகங்களில் ஈடுபடுகையில் அவர்கள் அவற்றை தனியார் துறையினரை விட குறைந்த விலைகளில் வழங்கக் கூடியதாயிருக்கிறது. இலங்கையில் காய் கறிகளின் விலைகள் பெருமளவுக்கு அதிகரித்திருந்த காலப் பகுதியில் காய்கறிகளை மலிவான விலைகளில் மக்களுக்கு அவர்கள் வழங்கியிருந்த அனுபவங்கள் உள்ளன. அதைப்போன்றே ஹோட்டல்கள், உணவு விடுதிகள் , பயணச் சேவைகள் என்பவற்றை போட்டியான விலைகளாயினும் திறம்படவும் நடத்தியுள்ளனர். ஆனால் அச்சேவைகளில் பெரும் அரச மானியங்கள் ஒளிவுமறைவாக பொதிந்திருந்தன. இராணுவ வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் வேதனங்கள் மற்றும் நடைமுறை செயல்களுக்கான செலவினங்கள் இவ்வாறான மானியங்களாகும். இராணுவத்தினர் மக்களுக்கு பொருட்களையும் சேவைகளையும் விற்பனை செய்கையில் அவற்றின் விலையை நிர்ணயிக்கையில் இவ்வாறான செலவினங்களை அதில் சேர்த்து வசூலிப்பதில்லை. இதனால் அவர்களால் அவற்றை நுகர்வாளர்களுக்கு மலிவான விலைகளில் விற்க முடிந்தது.
இன்னுமொரு ஒளிவு மறைவான செலவினம் இவற்றில் பொதிந்துள்ளது. அதாவது ஜனநாயக முறையில் ஆளும் நாடுகள் இராணுவத்தை மிகவும் கண்டிப்பான முறையில் பொது மக்கள் சிவில் வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைத்திருக்கின்றன. இராணுவத்தினர் தமது உயரதிகாரிகளிடமிருந்து ஒழுக்கமான முறையில் கட்டளைகளைப் பின்பற்றிச் செயற்படுவர். ஆனால், ஜனநாயக வாழ்வில் இதற்கு முற்றிலும் மாறாகவே பெரும்பாலான நிர்வாகங்கள் இடம்பெறுகின்றன. மக்களுக்கு என்ன வேண்டும் என்பதனை மக்களே தீர்மானித்துக் கொள்கின்றனர். ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் மக்கள் விரும்புபவற்றையே அறிந்து அவர்களுடைய விருப்புகளுக்கு ஏற்ப செயற்படுத்துகின்றனர். அதில் எந்தளவுக்கு மனித உரிமைகளையும் ஜனநாயக பெறுமானங்களையும் பின் பற்றி அவற்றை உறுதி செய்கின்றனர் என்பனவே கவனத்திற் கொள்ள வேண்டியவையாக உள்ளவை.
ஜனநாயகத்திற்கான விலை
பொது மக்களது நிலங்களைச் சுவீகரித்தது பற்றி பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிடுகையில் அமைச்சின் செயற்பாடுகளுக்கு எந்த ஒரு திணைக்களத்திடமிருந்து, அனுமதியினைப் பெறவேண்டிய தேவையில்லை எனக் கூறுவதிலிருந்து இராணுவம் எவ்வாறு சில சமயங்களில் வழி தவறிய முறையில் ஒரு வழி சிந்தனையுடன் செற்படுகிறது என்பதனை எமக்குத் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் பாதுகாப்புப் பிரச்சினைகளை பௌதீக ரீதியாகவும் இராணுவப் பார்வையிலுமே நோக்குகின்றனர். ஆனால் பாதுகாப்பு என்பது மானிட பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, சூழல் பாதுகாப்பு, வரலாற்று மற்றும் புராதன நினைவுச் சின்னங்கள் கொண்ட இடங்களது பாதுகாப்பு என்னும் வேறு பல பரிமாணங்கள் தொடர்பிலும் நோக்க வேண்டிய தொன்றாகும். ஆனால் நல்லாட்சி என்பதோ பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கிய வகையில் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளது என்பதனையும் பற்றி சிந்தித்துச் செயற்பட வேண்டிய ஒன்றாகும்.
வட மாகாணத்தில் முன்னர் (2009 இற்கு முன்னர்) நிலவிய யுத்தத்தின் பின்னர் பொது மக்களால் சட்ட பூர்வமாக தெரிந்தெடுத்த நிர்வாகம் ஒன்று அமையப் பெறுவதற்கு முன்னரேயே மத்திய அரசாங்கம் வட பகுதியில் உள்ள பெரும் நிலப் பரப்பினை சுவீகரிக்க சடுதியாக தீர்மானம் செய்துள்ளமை என்பது பெரிதும் கவனிக்கத்தக்க முக்கிய பிரச்சினையாகும். பெருமளவிலான மக்களது வாழ்வில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய தீர்மானங்களைச் செய்யும் போது அவர்கள் வாழும் பகுதியின் மாகாண சபைக்கு அம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவர்களது பிரதிநிதிகளை கலந்தாலோசனை செய்வதன் மூலமே பொருத்தமான தீர்மானங்களைச் செய்ய முடியும். நாட்டின் பொதுத் துறைத் தேவைகளின் அத்தியாவசியத் தேவைகள் நிமித்தம் பொது மக்களுக்குச் சொந்தமான பெருமளவு நிலப்பரப்பினை அரசங்கம் சுவீகரிக்க வேண்டிய தேவை ஏற்படுமானால், அது தொடர்பாக பாதிப்புக்குள்ளாகும் மக்களுடனும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளுடனும் கலந்தாலோசித்து அவர்களுக்கு நீதித்துறை மூலமாக சட்ட ரீதியான தமது எதிர்ப்பினைக்காட்ட போதிய அவகாசத்தினை அளிப்பது தான் பொதுவான நடைமுறையாகும்.
வட பகுதி யாழ்ப்பாணத்து மக்களில் ஏறத்தாள இரண்டாயிரம் பேர் தமது நிலங்களை அரசாங்கம் ஆக்கிரமிப்பது தொடர்பில் வழக்குத் தொடரத் தயாராக உள்ளனர். இதனால் ஐயாயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்படலாம் என்ற அபிப்பிராயம் நிலவுகிறது. கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு ஆதரித்து வாதாடியுள்ளபடி நீதிமன்ற சட்டத்திற்கு அரசாங்கத்தின் கொள்கை ஒரு மாற்று ஏற்பாடாக இருக்க முடியாது. பாதிக்கப்படக் கூடிய மக்களிடம் அவர்களது நிலங்களுக்கான, நில உரிமைக்கான சட்ட ரீதியான ஆவணங்கள் (ஒப்பனை) இருக்கும் நிலையில் இவ்வாறான அரசாங்க நடவடிக்கை ஏற்கப்பட முடியாது. அப்படியே எவரிடமாவது தமது நிலத்திற்கான உரிமை தரும் சட்ட பூர்வ ஆவணமான ஒப்பனை இல்லாது போயிருந்தால் அதனை அரசாங்கத்தின் சிவில் நிர்வாக அமைப்புகள் முறையாகப் பரிசீலித்து சரியாக இருக்கும் பட்சத்தில் மக்களுடைய உரிமைகளை நிலை நிறுத்த தேவையான ஆவணங்களை வழங்குவதும் அரசாங்கத்தினது கடமையாகும். இது தேசிய ஆர்வங்கள், நலன்கள் பொறுத்து முக்கியமானதாகும். எனெனில் நாட்டின் ஒரு பகுதியில் ஒரு முறை தவறு ஏற்பட்டுவிட்டால் அதன் விளைவுகள் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏற்பட்டு விடும் ஆபத்துண்டு. இராணுவம் நிலத்தினை சுவீகரிப்பதனால் இலங்கை நாட்டின் வாழ்வில் இராணுவத்தின் பங்கு விஸ்தரிக்கப்படுவதன் ஒரு விளைவாக சிறுபான்மை மக்கள் மட்டுமே பாதிக்கப்படுவர் என்ற எண்ணம் தவறானது. அது அனைத்து நாட்டுப் பிரஜைகளையும் காலப் போக்கில் பாதிக்கவல்லது என்பதனை மறந்துவிடக் கூடாது.
மூன்று தசாப்த கால யுத்தம், வன்முறை என்பனவற்றின் வடுக்களிலிருந்து இப்போது காயங்களை ஆற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் மக்கள் இருக்கும் போது கையில் ஆயுதம் ஏந்தி இருப்பவர்களுக்கும் நிராயுதபாணியாக இருக்கும் சாராருக்கும் இடையே சமத்துவம் இருக்க முடியாது. இதன் காரணமாகவே ஆட்சியில் இராணுவத்திற்கும் பொது மக்களுக்கும் இடையே பிரச்சினைகள் தோன்றலாம் என்பதால் நன்கு நிறுவப்பட்ட ஜனநாயக அமைப்புகளில் இராணுவமும் பொது மக்களும் தனித்தனியாகப் பிரித்து வைக்கப்படுகின்றனர். ஜனநாயக செய்முறைகள்மீது இராணுவம் ஆக்கிரமித்து அதிகாரம் செலுத்துவதால் இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள பாணமை பிரதேசத்தில் காணப்படுவதனைப் போன்று மக்களின் நிலங்களை அது (இராணுவம்) சுவீகரிக்க முயலும்போது உள்ளூர் நிர்வாக அமைப்புகளும் ஒத்துப் போக வேண்டியுள்ளது.

OUR DONORS & PARTNERS

 
 
You are here: Home வெளியீடு அச்சுப்பதிப்பு News in Tamil பொதுமக்களது விவகாரங்களிலிருந்து இராணுவத்தை பிரித்து வைக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்

Connect with us

About us

The National Peace Council (NPC) was established as an independent and impartial national non-government organization...

Read More

Contact Information

Address: 12/14, Balapokuna Vihara Rd, Colombo 06
Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Phone: +94 11 281 8344, +94 11 285 4127, +94 11 280 9348
Fax: +94 11 281 9064


david-kilgour   |   writetoreconcile  |   www.outoftheframe.lk